Wednesday, October 29, 2014

தமிழர் பண்பாடு

No comments :
 

இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேற்பட்ட தொன்மைகொண்ட தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளங்கள் நம்ப முடியாத அளவுக்கு மாறியிருக்கின்றன. சங்க இலக்கியம் வலியுறுத்திய மதிப்பீடுகளை இறுகப் பற்றி நிற்கும் ஒரு சமூகம் என்பதான தோற்றம் கேள்விக்குள்ளாகத் தொடங்கியிருக்கிறது. நவீன வாழ்வின் சகல கூறுகளையும் உள்வாங்கி உலக அரங்கில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள, விரிவுபடுத்திக்கொள்ளச் சளைக்காமல் போராடிக்கொண்டிருக்கும் சமூகத்தின் இயல்பான வளர்ச்சிப் போக்காகவே இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், வியாபாரம் முதலான காரணங்களின் நிமித்தம் உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவியிருக்கும்  தமிழர்கள் நவீன உலகின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிவருகிறார்கள். அந்தந்தச் சமூகங்களின் பகுதிகளாக மாறியிருக்கும் அதேசமயம் தம் பண்பாட்டு அடையாளங்களைத் தக்கவைத்துக்கொள்வதிலும் அதிக முனைப்புகொண்டவர்களாயிருக்கிறார்கள். நவீனத்தின் கூறுகளை உள்வாங்கி ஏற்றுக்கொள்ளும் இயல்புடைய தமிழ்ச் சமூகம் நவீன உலகின் விதிகளைப் புரிந்துகொள்வதற்கும் அதை எதிர்கொள்வதற்குமான ஆற்றல் கொண்டது எனத் தயக்கமின்றிச் சொல்லலாம். சென்ற பத்தாண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக்கூறுகளில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் தீவிரமானவை. நம் மரபின் அடையாளங்களாக அறியப்பட்டிருக்கும் சாதி அமைப்பு, குடும்பம், அறவியல் மதிப்பீடுகள், வழிபாட்டு முறைகள், திருமணச் சடங்குகள், உணவுப் பழக்கங்கள், கலைகள், இலக்கியப் போக்குகள் என எல்லாவற்றின் மீதும் நவீன வாழ்வின் செல்வாக்கு மேலோங்கிவருகிறது. உலகளாவிய அளவில் நவீன மனிதன் பண்பாடு பற்றிய தன் கற்பிதங்களை, மரபின் அடையாளங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் திணறிக்கொண்டிருக்கிறான். மூர்க்கமாகப் போராடவுங்கூட முற்படுகிறான். தமிழர் வாழ்விலும் பண்பாட்டுக்கூறுகளிலும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் இப்போக்கின் ஒரு பகுதி என்பதில் சந்தேகமில்லை.


thamilar panpadu, kalaachcharam, thamialar, thamil, thamil kaddurai, thamilarin naakarikam, thamil makkalin waalakai muraimai, thamilan, thaamilar

No comments :

Post a Comment