Sunday, November 9, 2014

வித்தியாசமான குரலை ரசிக்கிறார்கள்! – பாடகர் வேல்முருகன் பேட்டி!

No comments :
 
 
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திற்குள் 100 பாடல்களை பாடி முன்னணி பாடகராகியிருப்பவர் வேல்முருகன். அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் ஹிட்டாகியிருப்பதால் இசைப்பிரியர்களுக்கு பிடித்தமான பாடகராகி விட்டடார் என்பதோடு, ஹிட் பாடகர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி…

* நீங்கள் பாடிய ஹிட் பாடல்களைப்பற்றி சொல்லுங்கள்?

சினிமாவில் முதன்முதலாக ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்தான் என்னை பாட வைத்தார். ”மதுர….” – என்று தொடங்கும் பாடலை பாடினேன். அதையடுத்து ‘நாடோடிகள்’ படத்தில் ”ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா…” என்ற பாடல். அதன்பிறகு ‘ஆடுகளம்’ படத்தில் ஜி.வி.பிரகாஷின் இசையில், ”ஒத்த சொல்லால…” என்ற பாடலை தனுசுக்காக பாடினேன். நான் ஹீரோவுக்காக முதன்முதலாக பாடிய அந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. அது தனுஷே பாடியது போன்று இருந்தது. அந்த பாடல் மூலம் உலகம் முழுவதும் நான் சென்று வர வாய்ப்பு கிடைத்தது.

அதன்பிறகு யுவன் ஷங்கர் ராஜா இசையில், ‘கழுகு’ படத்துக்காக பாடிய ”ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்….” என்ற பாடல் பாடினேன். அதையடுத்து தமன் இசையில் ‘காஞ்சனா’ படத்தில் ”காயே கலுப்பங்கா…” என்ற பாடல், அதன்பிறகு சகுனியில் ”போட்டது பத்தல மாப்புள்ளே…” என்ற பாடல ஹிட்டானது. பின்னர் ”ஒரு கல் ஒரு கண்ணாடி”யில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ”வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு…”. இந்த பாடலும் என்னை உலகம முழுவதும் சுற்ற வைத்தது. அதோடு அடுத்தடுத்த தளத்துக்கும் கொண்டு சென்றது.

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’வில், ”கொஞ்சும் கிளி பாட வச்சா…”, ‘ஒரு ஊர்ல’ படத்தில் இளையராஜா இசையில், ”இப்படியும் ஒருத்தன் உண்டு அதை எப்படி நான் சொல்லுறது…” என்ற பாடல், அனிருத் இசையில், ‘எதிர்நீச்சல்’ படத்துக்காக ”சத்தியமா நீ எனக்கு தேவையேயில்ல…” என்ற பாடலை பாடினேன். இப்ப லேட்டஸ்டா பரத்வாஜ் இசையில், ‘அரண்மனை’ படத்துக்காக ”பெட்ரமாசு லைட்டேதான் வேணுமா அடி பேரழகே டார்ச் லைட்டு கசக்குமா…” என்ற ஹிட் பாடலை பாடியிருக்கிறேன். ஆக, 2008ல் பாடத் தொடங்கி, ”இது கதிர்வேலன்” காதல் படத்தோடு 100 பாடல்கள் பாடி விட்டேன். அதில் பெரும்பாலான பாடல்கள் ஹிட்டானவை என்பது சந்தோசமான விசயம். அதோடு தமிழ் சினிமாவில் இருக்கிற அனைத்து இசையமைப்பாளர்கள், அனைத்து பாடலாசிரியர்களின் பாடல்களை நான் பாடிவிட்டேன்.

* ஹீரோக்களுக்காக குரலை மாற்றி பாட முயற்சிக்கிறீர்களா?

எனக்கென்று ஒரு குரல் வளம் இருந்தாலும் ஹீரோக்களுக்கு பாடும்போது அவர்கள் சாயலில் ஓரளவு மாற்றிதான் பாட வேண்டும். அப்படி இல்லையென்றால் ரெக்கார்ட்டிங் செய்த பிறகு குரல் மேட்சாக இல்லை என்று அந்த பாடலை பயன்படுத்த மாட்டார்கள். மேலும், தனுசுக்கு ”ஆடுகளம்” படத்தில் பாடிய ”ஒத்த சொல்லால…” என்ற பாடல் நன்றாக பொருந்தியிருந்தது. அதேபோல் அதன்பிறகு அவர் நடித்த மரியான் படத்திலும் கொம்பன் சுறா பாடலை பாடுவதற்காக என்னைதான் அழைத்தார் ஏ.ஆர்.ரகுமான் சார். ஆனால், நான் பாடுவதற்கு முன்பே நீங்கள் டரேக்தான் பாடுகிறீர்கள் என்று சொல்லித்தான் பாட வைத்தார். அதனால் அந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினார். இருப்பினும் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடியது எனக்கு சந்தோசத்தைக்கொடுத்தது. அதையடுத்து, சகுனி படத்துக்காக கார்த்திக்கிற்காக போட்டது பத்தல என்ற பாடலை பாடினேன். அப்படி ஹீரோக்களுக்காக நான் பாடிய இரண்டு பாடல்களுமே சூப்பர் ஹிட்டதான்.

* வேற்று மொழி பாடகர்களால் தமிழ் பாடகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா?

அப்படியெல்லாம் சொல்ல முடியாது. நன்றாக யார் பாடினாலும் சான்ஸ் கொடுப்பார்கள். அதுதான் சரியானதும்கூட. மேலும், தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை வேற்று மொழிப்பாடகர்கள் இப்போது மட்டுமே பாடவில்லை. சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக, டிஎம்ஸ், எஸ்,பிபி., ஜேசுதாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி, சித்ரா என பல முன்னணி பாடகர் பாடகிகளும் வேற்று மொழியைச்சேர்ந்தவர்கள்தான். இவர்களெல்லாம் நன்றாக பாடியதினால்தான் தொடர்ந்து தமிழில் பாட வைத்தார்கள். அதனால் இங்கே நல்ல குரல்வளம் கொண்ட திறமையானவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. யாரும் மொழி பேதம் பார்ப்பதில்லை.

* கிராமிய இசைக்கலைஞர்களின் அணிவகுப்பு அதிகரித்திருப்பது போட்டியை உருவாக்கியுள்ளதா?

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் இருந்து ஓரிருவர்தான் சினிமாவில் பாட வருவார்கள். ஆனால் இப்போது விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி, கானா உலகநாதன், கானா பாலா, ஜெயமூர்த்தி, அந்தோனி தாஸ், மகாலிங்கம், ரீட்டா, கோட்டைச்சாமி ஆறுமுகம் இந்த மாதிரி இன்றைக்கு 25 முதல் 30 கிராமிய இசைக்கலைஞர்கள் சினிமாவில் பாடிக்கொண்டிருக்கிறார்கள். இதை போட்டி என்று சொல்வதை விட, கிராமிய இசைக்கலைஞர்களின் வித்தியாசமான குரலை ரசிகர்கள் அதிகமாக ரசிப்பதால், வரவேற்பு அதிகரித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

* சமீபகாலமாக மியூசிக் டைரக்டர்கள், பாடலாசிரியர்கள் என நடிக்க வருகிறார்களே. நீங்கள் எப்படி?

வாய்ப்பு கிடைத்தால் நானும் கட்டாயம் நடிப்பேன். அதுவும் நம்ம தொழில்தானே. ஆனால் நல்ல கதை, கேரக்டராக இருக்க வேண்டும். அப்படி கிடைக்கிற பட்சத்தில் நடிப்பேன். அதேசமயம், நம்முடைய உழைப்பு வெளியில் தெரியனும் அந்த மாதிரி படங்கள் என்றால் நடிப்பேன். அது மட்டுமின்றி படத்தை ரிலீஸ் செய்யும் கம்பெனியாக இருக்க வேண்டும். நம்மிடம் 50 நாட்கள் கால்சீட்டை வாங்கி நேரத்தை வீணடித்து விடக்கூடாது.

மேலும், என்னதான் நடித்தாலும் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் அவர்கள் ஏற்றுக்கொண்டால்தான் தொடர முடியும். அதனால் நான் நடிக்கிற படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தால் நடிப்பை தொடருவேன். இவரெல்லாம் நடிக்க லாயக்கே இல்லை என்று சொன்னால் நானே ஒதுங்கிக்கொள்வேன். மக்களின் முடிவை ஏற்றுக்கொள்வேன் என்கிறார் பாடகர் வேல்முருகன்.
viththiyasamana kural, paadakar, padakarin petti, vaarnthuwarum padakar, 

No comments :

Post a Comment