Wednesday, January 28, 2015
பிரசவத்துக்குப் பின் புறக்கணிப்பு: பொங்கி தீர்த்த ஐஸ்வர்யா ராய்

“தாயாகும்போதுதான் ஒரு பெண் முழுமையாகிறாள். 'தாய்மை' என்ற வார்த்தையின் இனிமையை யாராலும் உணர முடியும். ஆனால், கர்ப்பம் ஆனது முதல் அந்தப் புதிய உயிருக்கு இந்தப் பூமியை அறிமுகம் செய்யும் வரை ஒரு பெண் படும் வலிகளை யாராலும் விவரித்துவிட முடியாது. இந்தத் தாய்மையின் தனித்துவத்தை போற்றும்விதமாக அமைந்ததுதான், அண்மையில் சென்னையில் நடைபெற்ற 58 வது அகில இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்கள் கூட்டமைப்புகளின் மாநாடு.
அகில இந்திய மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பு மற்றும் தென்னிந்திய மகளிர் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இம்மாநாட்டை நடத்தின.
'பெண்களின் நலம்தான், நாட்டின் சொத்து' என்ற தலைப்பில் ஜனவரி 21 முதல் 25 வரை நடந்த இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் பத்தாயிரம். உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குநர் டாக்டர் ஜேக்கப் குமரேசன் மாநாட்டைத் துவக்கி வைக்க, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் நடிகர் கமல்ஹாசன்.
ஐந்து நாட்கள் நடைபெற்ற இம் மாநாட்டிலும் விருந்திலும் ஐஸ்வர்யா ராய் பச்சன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. பெண்களின் பூப்படைதல் தொடங்கி மெனோபாஸ் அடையும் வரை சந்திக்கும் அத்தனை மருத்துவ ரீதியான சவால்களும், அதற்கான தீர்வுகளும் விரிவாக விளக்கப்பட்டன.
பழைய சிகிச்சை முறைகளை பற்றி மட்டுமே பேசாமல் ரோபாட்டிக் சர்ஜரி, ஸ்டெம் செல்கள் என வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பற்றியும் விரிவாக பேசியது... இந்த கலந்தாய்வின் பெரிய ப்ளஸ்.
கருத்தரிப்பு மற்றும் சுகப்பிரசவம் ஆவதில் ஏற்படும் பிரச்னைகள், மாதவிடாய் தொடர்பான சிக்கல்கள், இளம்பெண்களை அதிகம் தாக்கும் சினைக்கட்டி பிரச்னைகள் போன்ற பல தலைப்புகள் விவாதிக்கப்பட்டாலும், வந்திருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது... பூதாகரமாக பெருகிவரும், பெண்கள் சார்ந்த புற்றுநோய் மற்றும் ஐ.டி பெண்கள் கர்ப்பமடைவதில் உள்ள பிரச்னைகள் பற்றிய விரிவுரைதான். பெண்களுக்கு ஏற்படும் மருத்துவரீதியான சில சந்தேகங்கள் குறித்து கலந்தாய்வில் கலந்து கொண்ட மகப்பேறு நல மருத்துவர்கள் ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசன் மற்றும் சுமனா மனோகர் பகிர்ந்து கொண்ட பதில்களில் சில....
கர்ப்பத்தின் போது பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டால், கருக்கலைப்புதான் ஒரே தீர்வா?
புற்றுநோயின் பாதிப்பு எந்த அளவில் உள்ளது என்பதைப் பொறுத்துதான் தீர்வு செய்ய வேண்டும். கட்டி சின்னதாக இருந்து ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால்... அப்போது குழந்தைக்குப் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்காது. மருந்துகள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். இந்த மருந்துகள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்காத அளவில் இருக்க வேண்டியது அவசியம். தாய்ப்பாலும் கொடுக்கக் கூடாது. கட்டியின் அளவு பெரியதாக இருந்து, மற்ற பாகங்களுக்கும் பரவக் கூடிய நிலையில் இருந்தால் கருவை கலைத்து விடுவதுதான் சரி.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையா?
கர்ப்பப்பை வாய் (செர்விக்ஸ்) புற்றுநோய், ஹெச்.பி.வி எனும் வைரசினால் ஏற்படக்கூடியது. ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மற்றும் அதிக முறை பிரசவிக்கும் பெண்களுக்கும்தான் கர்ப்பப்பை வாயருகே தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இது வேறெந்த புற்றுநோயையும் உண்டாக்குவதில்லை. கருப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் இவை இரண்டும் உடலின் ஹார்மோன் மாற்றத்தினால் ஏற்படக்கூடியவை. இரண்டில் எந்த பாதிப்பு என்றாலும் சரியான மருந்து எடுக்காத நிலையில் மற்ற புற்றுநோயும் எளிதில் தாக்கி விடும்.
அழகு ஐஸ்வர்யா பச்சன்: அழகிய உரை
இந்த மாநாட்டில் ஒரு பகுதியாக ஸ்டெம் செல் பற்றிய கருத்தாய்வில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா பச்சன், “ தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள தொப்புள்கொடி பந்தம், குழந்தை பிறக்கும் அந்த நிமிடத்தோடு நின்று விடக்கூடியது கிடையாது. அது அந்தக் குழந்தையின் வாழ்க்கை முழுக்கவும் பயன்படக்கூடியது. இதயப் பிரச்னை, சிறுநீரகம் செயலிழப்பு என உங்கள் குழந்தையின் எந்த விதமான நோய்க்கும் இந்த ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து வைப்பதன் மூலம்தீர்வு காண முடியும். ஆனால், இந்த ஸ்டெம் செல் தெரப்பியை பற்றி இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் தெரியுமா என்றால் அது கேள்விக்குறிதான். எந்த ஒரு தகவலும் நம்பிக்கையான நபரிடமிருந்து வரும்போது அதை நம்புபவர்களும் அதிகளவில் இருப்பார்கள்.
எனவே இந்த மருத்துவத்தின் அவசியத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது மீடியாக்களின் பொறுப்பு. அனைத்து மகப்பேறு மருத்துவர்களும் தங்களிடம் பிரசவத்துக்காக வரும் தாய்மார்களுக்கு இந்த ஸ்டெம் செல் முறையைப் பற்றி கூறி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாமே’’ என்று அழகான கோரிக்கை வைத்த ஐஸ்வர்யா, இந்தியாவில் சமீபகாலமாக தொடரும் பேறுகால மரணங்கள் குறித்துப் பேசும்போது, சற்றுக் கோபம் காட்டினார் முகத்தில்.
''ஒரு பெண்ணுக்கு உண்டான எந்த அத்தியாவசிய தேவைகளையும் இந்த சமூகமும் சரி, குடும்பமும் சரி... நிறைவேற்றுவதே இல்லை. குழந்தை பிறக்கும் வரை ஒரு பெண்ணை கவனிப்பவர்கள், குழந்தை பிறந்தவுடன் அந்தக் கொண்டாட்டத்திலேயே அந்தப் பெண்ணைப் பற்றி மறந்துவிடுகிறார்கள். கர்ப்பக் காலங்களில் உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி பெண்ணுக்கு தேவையான எதுவுமே சரியாகக் கிடைப்பதில்லை. பிரசவக் காலங்களில் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காததாலும், முறையான மருத்துவ பரிசோதனைகள் இல்லாத காரணத்தாலும்தான் இன்றும் இந்தியாவில் பல கர்ப்பக்கால மரணங்கள் தொடர்கின்றன.
இந்தப் பூமிக்கு மேலே ஓர் உயிர் உதித்த மறுகணமே, அலட்சியத்தால் உயிர் பறிக்கப்பட்ட பல பெண்களின் உடல்கள் பூமிக்கு அடியில் செல்கின்றன. இதை எல்லாம் தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு பெண்ணையும் உங்கள் சொத்தாக நினைத்து பார்த்துக் கொள்ளுங்கள்’’ என பெண்மைக்கே உரிய தாய்மை மாறாமல் பேசி முடித்தார் ஐஸ்.
pirasawathukku pin purakanippu, thhaymai patti pesiya isvarya ray, thirai thakawal,
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment