Wednesday, November 12, 2014
30 வயதில் பெண்களுக்கு வரும் இதயநோய்

கடுமையான பணிச் சூழல்களால் மன அழுத்தம்,
மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கேடுகள் பெண்களிடம்
அதிகரித்துவருவதாகச் பல்வேறு ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. அண்மையில்
வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இதயநோய்களுடன்
சிகிச்சைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை 20% வரை அதிகரித்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 50
வயதைக் கடந்த - மாதவிலக்கு நின்றுபோன - பெண்களுக்கு மட்டுமே மாரடைப்பு
ஏற்படுவது வழக்கம். காரணம், பெண்களுக்கு இயற்கையிலேயே சுரக்கின்ற ஈஸ்ட்ரஜன்
எனும் ஹார்மோன் இவர்களுக்கு மாதவிலக்கு நிற்கும்வரை மாரடைப்பு ஏற்படுவதைத்
தடுக்கிறது.
இந்த ஹார்மோன் ரத்தத்தில் உள்ள
சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும்; ரத்த அழுத்தம் சீராக இருக்க
உதவும்; எல்.டி.எல். எனும் கெட்ட கொழுப்பைக் குறைத்து, ஹெச்.டி.எல். எனும்
நல்ல கொழுப்பை அதிகப்படுத்தி, இதயத்துக்குப் பாதுகாப்பு தரும். ஆனால்,
இப்போதோ இந்தியாவில் 30 வயதுள்ள பெண்களும் மாரடைப்புக்குச் சிகிச்சை
பெற்றுவருகிறார்கள்.
ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை
அதிகரித்தபடியே இருக்கிறது. ஈஸ்ட்ரஜன் அளவு இன்றைய பெண்களுக்கு வெகுவாகக்
குறைந்துவிட்டதுதான் காரணம். இதற்கு முக்கிய காரணம்பெண்களிடம்
அதிகரித்துவரும் ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம். ஆரோக்கியம் காக்கும்
இந்தியப் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடும் வழக்கம் இப்போது பொதுவாகவே
குறைந்து விட்டது.
மேற்கத்திய உணவுக் கலாச்சாரம்
நம்மை அடிமைப்படுத்திவிட்டது. சிறுதானியங்களின் மதிப்பை நாம்
மறந்துவிட்டோம். பருப்புகளின் பலனைப் புறந்தள்ளிவிட்டோம். காய்கறிகளைச்
சமைக்கச் சோம்பல் வந்துவிட்டது.
பதிலாக, அடிக்கடி உணவகங்களுக்குச்
சென்று, எண்ணெயில் வறுத்த, பொரித்த, கலோரிச் சத்து மிகுந்த பீட்ஸா,
ஹாம்பர்கர் போன்ற துரித உணவுகளையும் அசைவ உணவுகளையும் மிகையாக உண்பது
வாடிக்கையாகிவிட்டது. வீட்டில் உள்ள பெண்களுக்கு உடலுழைப்பு
குறைந்துவிட்டது. உடற்பயிற்சியும் இல்லை.
இதனால், இவர்களுக்கு வளர்சிதை
மாற்றத்தில் அசாதாரண மாற்றம் ஏற்பட்டு, இளமையிலேயே உடற்பருமன்
வந்துவிடுகிறது. இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது; இன்சுலின்
எதிர்ப்பை அதிகப்படுத்துகிறது; நீரிழிவு நோயையும் இதய நோய்களையும்
கூட்டுசேர்த்துவிடுகிறது.
இதயநோய்குறித்த முழு ஆய்வு ஒன்று,
வளரும் நாடுகளில் இருக்கும் மக்களைவிட இந்தியாவில் நீரிழிவு நோயும்
மாரடைப்பும் இளம் வயதிலேயே பெண்களுக்கு ஏற்படுகிறது என்றும், 20 வயதுக்கு
மேற்பட்ட பெண்களில் கிராமப்புறங்களில் மூன்று முதல் ஐந்து சதவீதமும்,
நகர்ப்புறங்களில் 8 முதல் 10 சதவீதமும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்றும் அந்த ஆய்வு சொல்கிறது.
இவற்றின் விளைவால், பெண்களுக்கு
இதய நோய்களால் ஏற்படும் மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன என்றும்
அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
penkaluku warum ithaya nooy, muppathu wayathil penkalukku warum ithaya nooy, echcharikkai,
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment