Sunday, November 9, 2014
பிரணாப் முகர்ஜியின் பூடான் பயணம்: கையெழுத்தானது நாளந்தா பல்கலைக் கழகத்தைப் புதுப்பிக்கும் ஒப்பந்தம்

பூடானுக்குச் சென்றுள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
முன்னிலையில் பீகாரில் அமைந்துள்ள நாளந்தா பல்கலைக் கழகத்தைப்
புதுப்பிப்பிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பூடான்
சென்றுள்ளார். கடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு, பூடான் சென்ற முதல் இந்தியக்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆவார்.
அவருடன் ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா, நாடாளுமன்ற உறுப்பினர்கள்
முக்தார் அப்பாஸ் நக்வி, அனில் ஷிரோல், மகேந்திரநாத் பாண்டே உள்ளிட்டோரும்
உடன் சென்றனர்.
பூடானில் உள்ள பாரோ சர்வதேச விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றடைந்த
பிரணாப் முகர்ஜியை, யாரும் எதிர்பார்த்திராத வகையில் வழக்கத்தை மீறி,
அந்நாட்டின் அரசர் ஜிக்மே கேசர் நாம்கியாவ் வாங்சுக் தனது மனைவியுடன்
நேரில் வந்து வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, பூடான் தலைநகர் திம்புவுக்கு பிரணாப் முகர்ஜி காரில்
அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான
பள்ளி மாணவர்கள் இந்தியா, பூடான் நாடுகளின் தேசியக் கொடிகளை ஏந்தி நின்று
வரவேற்பு அளித்தனர்.
குடியரசுத் தலைவரின் பூடான் சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமான பீகாரில்
அமைந்துள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பூடான் தலைநகர் திம்புவுக்குச் சென்ற பிரணாப், அந்நாட்டு அரசர் வாங்சுக்
உடன் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பை அடுத்து, நாளந்தா
பல்கலைக்கழகத்தை புதுப்பித்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய வெளியுறவுத்
துறைச் செயலர் சுஜாதா சிங், பூடான் வெளியுறவுத்துறைச் செயலர் யேஷேய் டோர்ஜி
ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சர்வதேசக் கல்வி நிறுவனமாக நாளந்தா பல்கலைக்கழகம் உருவெடுத்து நாடு, மொழி,
ஜாதி, மதம், பாலினம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து திறமையான மாணவர்களை
உலகெங்கிலும் உருவாக்கும்.
கல்வியறிவு நிறைந்த ஆசிய சமுதாயத்தை உருவாக்குவது, பிராந்திய ரீதியிலான
விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு நாளந்தா
பல்கலைக்கழகம் செயல்படும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இப்பல்கலைக் கழகத்துக்கு பயில வரும் உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரிய விசாக்களை இந்தியா வழங்கும்.
பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்துதல், செயல்பாடுகள் ஆகியவற்றுக்கான நிதி
ஆதாரம், தன்னார்வ அடிப்படையில் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட அம்சங்கள் இதில்
இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, பூடான்-சீனம் எல்லைப் பிரச்னை குறித்து பேசுவதற்காக இந்த
சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படவில்லை என பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
‘இந்தியாவுக்கும், பூடானுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. எனவே, மூன்றாவது
நாட்டுப் பிரச்னை காரணமாக, நாங்கள் நெருங்கி வருவதாகக் கூறுவது முற்றிலும்
தவறு‘ என பிரணாப் முகர்ஜி கூறியதாக அவரது செய்தித் தொடர்பாளர் வேணு ராஜாமணி
பூடானில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ulaka seythikal, pooddan payanam, palkalaikalakam puthupikkum oppantham, inthiya kudiyarasuthalaiwar
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment